Thursday 30 November 2017

கொட்டிகிடக்கும் பறவைகள்........



புதர்சிட்டு 
விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் காட்டு மைனா, சாதரண மைனா, சிறிது தூரத்தில்  வென்புருவ வாலாட்டி. இவை அனைத்தும் நிலத்தில் இரையை தேடிகொண்டிருந்தது. மறுபுறத்தில் விவசாயி, மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்தார். அவரும், மாடும், பறவைகள் பக்கம் செல்லும்பொழுது அவை நகர்ந்து செல்கிறதே தவிர அங்கிருந்து பறந்து செல்லவில்லை அனைத்தும் மனிதர்கள் அருகில் வாழ பழகி கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது ஏலகிரியில்.

நான்கு கிலோமீட்டர் செல்லவேண்டிய தூரம், பறவைகளை பார்த்து கொண்டே செல்வதற்கு வசதியாக நடந்து செல்வோம் என்று நண்பர் மாசிலாமணியுடன் நடந்தேன். நான்கு கிலோமீட்டர் என்பது இலக்கு இல்லை, போக வேண்டிய தூரம் என்பதால், சென்றோம். என்ன அதிகமாக பறவைகள் இருந்துவிட போகிறது என்ற நினைப்பு ஆரம்பத்தில் வந்தது என்னமோ நிஜம். ஆனால் கொட்டிகிடக்கிறது பறவைகள் ஏலகிரி மலை மேல்.


குக்குறுவான் 
காட்டு மைனாவிற்கு முன்பக்கம் கொம்புகள் போல் முடிகள் நீண்டு இருப்பதை பார்த்தவுடன் மாசிலாமணி சொல்லிவிட்டார் இது காடு மைனா என்று. நான் அப்பொழுதான் பார்க்கிறேன். அடர் பழுப்பு நிறத்தில் இல்லாமல் பழுப்பு நிறத்தில் உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல் மரங்கள் நிறைந்த இடத்தில் காணப்படுகிறது. ஆனால் மனிதர்களுடன் வாழ பழகி கொண்டது. 

குளிர்காலம் தொடக்கம் என்பதால் ஒரு சில வலசை பறவைகள் வர தொடங்கிவிட்டன. காகங்கள் போல் ஒவ்வொரு பறவையும் அதிக எண்ணிக்கையில்  இருந்தது. ஆனால் ஒரே ஒரு காகத்தை மட்டும் தொடக்கத்தில் பார்த்தோம் அதன் பின்பு காகங்களே இல்லை. ஒரே ஆச்சரியமாக இருந்தது, காகங்களே இல்லாமல் இருக்கும் இடத்தை பார்த்தபொழுது.

மலை மேல் காகங்கள் இருக்காதோ என்ற கேள்வி தோன்றுகிறது? புதர்சிட்டு, காகங்கள் போல், போகும் இடம் முழுவதும் நம் பார்வைக்கு கிடைக்கிறது. இவ்வளவு புதர்சிட்டை இப்பொழுதுதான் பார்க்கிறேன். குக்குறுவான் அதிக எண்ணிக்கையில் பார்த்துக்கொண்டே சென்றோம். ஒரே மரத்தில் நான்கு ஐந்து குக்குறுவான் அமர்ந்து இருந்தது. பச்சை, சிகப்பு, மஞ்சள்  நிறத்தில் மற்றும் தடினமான அலகு கொண்டு சிறயதாக இருக்கும் பறவைதான் குக்குறுவான்.
.
சாம்பல் வாலாட்டி 
சிறிய புள்ளினங்களை அதிகளாவில் பார்க்க முடிந்தததான் சிறப்பு. வலசைபறவைகள் குறைந்த எண்ணிகையில் இருந்தாலும், உள்ளூர் பறவைகளே அதிகம். ஒரு சாம்பல் வாலாட்டி, வாலை ஆட்டாமல் தரையில் இரையை தேடிகொண்டிருந்தது. மற்றொரு இடத்தில் அதே அல்ல வேறு ஒரு சாம்பல் வாலாட்டி நீண்ட நேரம் மின் கம்பியில் அமர்ந்திருந்தது. சூரிய ஒளி பின் புறம் இருந்ததால், நீண்ட நேரம் நாங்கள் அதன் அருகில் நின்று என்ன பறவையாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தோம். பிறகு அங்கு இருந்து கிளம்பி எதிர்புறம் சென்று வாலாட்டி அமர்ந்தது. பிறகு ஓ சாம்பல் வாலாட்டி என்று நாங்கள் ஒரு முடிவுக்கு வந்த பிறகே நகர்ந்தோம். அவற்றை துரத்தியும் பார்திருக்கலாம் ஆனால் அவை தானாக சென்ற பிறகே பார்த்து பதிவு செய்தோம்.

சென்னையில் எங்கையாவது சிட்டு குருவியை பார்த்துவிட்டால் அதுவே பெரிய விஷயம். இப்பொழுது நாளிதழ்களில் கூட வரும் அளவுக்கு ஆச்சரியமாகிவிட்டது. ஆனால் இங்கு சர்வ சாதரணமாக உலாவி கொண்டிருக்கிறது. வீடுகள் அருகில், தரையில் என்று கூட்டமாக இரையை தேடுதோ அல்லது ஏதாவது தொலைத்த பொருளை தேடுகிறதோ என்று தெரியவில்லை, ஆனால் குனிந்த தலையை நிமிர்த்தவேயில்லை. 

புதர்சிட்டு
அங்குள்ள மக்கள், நாங்கள் எப்படி பறவைகளை பார்த்து கொண்டு செல்கிறோமோ, அவர்கள் எங்களை பார்த்து கொண்டு சென்றார்கள். வேக வேகமாக செல்கிறார்கள். குறிபிட்ட நேரத்தில் மட்டுமே பேருந்து என்பதால் அவற்றை பிடிக்க அந்த வேகம் என்று தெரிகிறது. அவர்களிடம் பறவைகள் பற்றிய எந்த பேச்சும் இல்லை. வாழ் வாதறதிற்க்கான செயல்பாடுகள் மட்டும் காணப்பட்டது.

ஒரு புதர்சிட்டு, கல் மேல் அமர்ந்து நீண்ட நேரம் தியானத்தில் இருந்தது. ஒரு வேலை பறவைகளும் ஏதாவது யோசித்து கொண்டிருக்குமோ என்ற யோசனை  வந்தது. படத்தை பாருங்கள் நீங்களும் அதே முடிவுக்கு வரலாம். ஆண்-கருப்பு நிறம் என்றால், பெண்-பழுப்பு நிறம் உடையது. தூக்கணாங்குருவி கூடு மட்டும் இருந்ததே தவிர அவை கண்களில் மாட்டவில்லை.

எங்களிடம் இருந்து ஓடிய முயல் 
ஒரு இடத்தில் நின்று பறவைகளை பார்த்து கொண்டிருந்தபொழுது சடார் என்று ஒரு சிறு உருவோம் எங்களை கடந்து ஓடியது. என்ன என்று பார்பதற்குள், ஒரு சுற்று சுற்றி வேகமாக மலை அருகில் சென்று மறைந்தது. அது ஒரு காட்டு முயல். இயற்கையான சூழலில், அங்கு இருக்கும் உணவுகளை சாப்பிட்டு மனிதர்களை கண்டால் ஓடுவது என்று சுதந்திரமாக இருக்கிறது. இதை எழுதும்பொழுது ஒரு நிமிடம் யோசித்துபார்த்தேன் இப்பொழுது அந்த முயல் என்ன செய்து கொண்டிருக்கும் என்று கிழங்கை கொறித்து கொண்டிருக்கலாம் அல்லது எதையாவதை பார்த்தாவது தாவி தாவி பயந்து ஓடி கொண்டிருக்கலாம் அல்லது பொந்தில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டிருக்கலாம். அல்லது வேடிக்கை பார்த்து கொண்டிருக்கலாம். ஆக இதில் ஏதாவது ஒன்று நிச்சயம் உண்டு. வேட்டை மனிதர்கள் அவற்றை பிடித்தும் இருக்கலாம் என்ற யோசனை கட்டுரை எழுதி முடித்த பிறகு வந்தது.

நிமிர்ந்த புள்ளி சில்லை 
உட்காரும்பொழுது நிமிர்ந்து உட்காருங்கள் என்று சொல்வோம் அல்லவா. அதை புள்ளி சில்லை அப்படியே பின்பற்றி ஒரு மின் கம்பியில் நிமிர்ந்து அமர்ந்து இருந்தது.  

எல்லா உயிரிணதற்க்கும் இப் புவியில் இரை உண்டு என்று இந்த புள்ளினங்கள் நன்கு உணர்ந்து இருப்பதால் வேறு வேறு பறவைகள் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலும் அவற்றுக்குள் எந்த சண்டையும் இல்லை. ஒரு இடத்தை வாங்கியவுடன் அந்த இடத்திற்கு நாம் தான் அதிபதி என்று நினைப்பு வரும் முன்  கிழே வருவது போலும் யோசிக்க வேண்டியுள்ளது.

நாம் வாங்கிய இடத்தில், நாய்கள் இருந்தால் அவை அதன் எல்லை கோட்டை வகுக்கும். அங்குள் மரத்தில் பறவை கூடு கட்டும் மற்றும் அவை அதன் இடம் என்று நினைக்கும். பாம்பு காணப்பட்டால்-அதன் பொந்தை தேடி சர சர வென நமக்கு முன்னாடியே நாம் வாங்கிய இடத்தில் ஓடும். சிறு செடிகளில் வண்டுகள், வண்ணத்துபூச்சிகள் ஓயாமல் பறந்து கொண்டிருக்கும். மேல் இருந்தால்தான் ஆபத்து என்று மண்புழுக்கள் நம் இடத்தின் மண்ணிற்குள் இருக்கும். நம் இடம் என்ற  முடிவுக்கு வருவதற்கு முன், இவ்வளவு உயிரிணங்களும் இவை எங்கள் இடமும் என்று உரிமை கொண்டாடுவதை தடுக்க முடியாது, மறுக்குவம் முடியாது. 

கதிர்குருவி -Juv
ஒரு இடத்தில் ஆரம்பநிலை கதிர்குருவி(Ashiy Prinia-Juv)  கூட்டமாக இரையை தேடிகொண்டிருந்தது.  அதன் தோற்றம் மற்றும் உடல் அமைப்பு எங்களுக்கு இவை warbler போன்று இருப்பதாக நினைக்கவைத்தது. படங்களை எடுத்துக்கொண்டு பின்பு பறவை வல்லுநர் சந்திரசேகர் சார் அவர்களிடம் கேட்டபொழுது இவை ஆரம்பநிலை கதிர் குருவி என்று சொன்னார். படத்தை நீங்களும் பாருங்கள். 

ஒரு தையல் குருவி தனியாக அங்கும் இங்கும் நடந்தே சுற்றி வருவதை, அருகில் சென்று பார்த்தபொழுது, அவை எங்களை தள்ளி நில்லுங்கள் என்று சொன்னதை கேட்டு தள்ளி நின்று கொண்டோம். பெரிய இலையை மடித்து முனை பகுதியை அருமையாக தைத்து ஒரு தையல்காரர் செய்யும் வேலையை இவை செய்வதால் தையல் குருவி என்று பெயர் பெற்றது. இவற்றை நாம் தோட்டத்தில், புதர்கள், கொடிகள் அருகில் வேக வேகமாக பேருந்தை பிடிக்க செல்வது போல் பர பரப்பாக எப்பொழுதும் இருப்பதை பார்க்கலாம்.

தையல் பறவை 
கருஞ்சிட்டு-ஆண் 
பெரும்பாலும் ஆண்-பெண் பறவைகளை பார்க்கும் பொழுது ஒரே நிறத்தில் இருந்தால் கண்டுபிடிக்க சிறிது முயற்சி செய்யவேண்டும். ஆனால் வேறு வேறு நிறம் உடைய ஆண், பெண் பறவைகள் பார்க்கும்பொழுது சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். அப்படி ஒரு பறவையான இந்தியன் கருஞ்சிட்டை ஒரு இடத்தில் ஆணையும் மற்றொரு இடத்தில் பெண்ணையும் பார்த்து பதிவு செய்துகொண்டோம்.

கருஞ்சிட்டு-பெண் 
ஒரு பறவை வேகமாக பறந்து கொண்டே இருந்தது. அவற்றை பார்த்து பதிவு செய்வதற்குள் தெளிவாக மாட்ட மாட்டேன்கிறது. இருந்தாலும் விட கூடாது என்று தொடர்ச்சியாக பறவைகளை பார்த்து வருவதால் பறப்பது பச்சை சிட்டு என்று தெரிந்து கொண்டோம். உடல் முழுவதும் பச்சை நிறம் இருப்பதால் ஒரு வாழை இலையை பார்ப்பது போலவே இருக்கும். ஒரு மரத்தில் அமர்ந்து அவற்றுக்கு ஏற்ற பழத்தை சாப்பிடும்பொழுது படம் எடுத்து விட்டோம். விடுவோமா ...

பச்சைசிட்டு 
ஒரு பறவை மிக உயரமான இடத்தில் அமர்ந்து இருந்தது. நாங்களும் தூரமாக இருந்தோம். அதனால் பைனாகுலர் வழியாக பார்த்ததில் அவை சிறிய மின்சிட்டு என்று தெரிந்து கொண்டோம். பெயருக்கு ஏற்றது போல் மிக சிறிய பறவைதான் சிறிய மின்சிட்டு.
 
தனியாக ஒரு பறவை, வேறு பறவைகளுடன் சேராமல் அமர்ந்து இருந்தது. இவற்றையும் உற்று நோக்கிதான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவை நீண்ட வால் பழுப்பு கீச்சான் (Long tailed brown shrike). மின்கம்பியில் அமர்ந்து இருந்ததை நாங்கள் பார்க்கிறோம் ஆனால் அவை எங்கேயோ பார்த்துகொண்டு இருந்தது.

சிறிய மின்சிட்டு 
பாதைகள் தார், மண் என்று கலந்தே ஏலகிரியில் இருக்கிறது. வளைந்து, நெளிந்து செல்கிறது. ஜாலியாக நாம் அதன் வழியாகவே செல்லலாம். செம்மீசை சின்னான் பறவை, போகும் வழியெங்கும் இருக்கிறது.  செடி, கொடிகள் கொண்ட முட்புதாரில் இரண்டு செம்மீசை சின்னான் ஓடி, ஆடி, பாடி கொண்டிருந்தது. ஒன்று-இன்னொன்றை சிறிது தூரம் துரத்த, அவை மீண்டும் பழைய இடத்திற்கு வர என்று உலகை மறந்து விளையாடுவதை சிறிது நேரம் நின்று பார்த்து ரசித்தே நகர்ந்தோம்.

சிறிய பறவைதான் வெள்ளை கன்னி ஆனால், நொடி நேரத்தில் தாவிக்கொண்டே இருத்ததை பிடித்து நலம் விசாரிபதற்குள் போதும் போதும் என்றாஆகிவிட்டது. கண்ணை சுற்றி வெள்ளை நிறத்தில் வலயம் இருப்பது நமக்கு கூகுள் மேப்பில் ஒரு இடத்தை கண்டுபிடிப்பது போல் சுலபமாக இவற்றை இனம் கண்டுபிடித்து விடலாம்.  பறவைகளை தேடி நாம் என்பதால் போல், வெள்ளை கன்னி பூச்சிகளை தேடி சென்று சொல்லலாம்.
இவற்றுக்கு இடையில் நானும் உள்ளேன் ஐயா என்பது போல் புள்ளி புறா ஒன்று அமர்ந்து இருந்தது. நமக்கு அதன் புள்ளிகள் அடையாளம் காண உதவுவது போல் அவற்றுக்கு என்ன தோன்றுகிறது என்று தெரிந்துகொள்வேண்டும் என்றா ஆவல் உண்டு.
 
பச்சைக்கிளி, தேன்சிட்டு, கரும்பச்சை கரிச்சான், கருங் கரிச்சான் என்று கலவையான பறவைகளை பார்த்து பதிவு செய்து கொண்டே நடந்து முடித்தோம்.

                                                                   -செழியன் 

   Photos- Dr.Masilamani         

lapwing2010@gmail.com
நீண்ட வால் பழுப்பு கீச்சான் 
கரும்பச்சை கரிச்சான் 

புள்ளி புறா 
வென்புருவ வாலாட்டி 
சாம்பல் வாலாட்டி 

வெள்ளை கன்னி




3 comments:

  1. I enjoy your posts thoroughly. Wonder how you get tamil names for almost all species ?

    ReplyDelete
    Replies
    1. Thank you for your feedback. I collected tamil names of species from various old articles and environment friends...

      Delete
  2. Delightful. Looking forward to more such birding articles in Tamil...

    ReplyDelete