Thursday, 10 August 2017

ஓர் சந்திப்பு : சின்னானுடன்


லங்கூர் 
எங்களை பார்த்து அமைதியாகவே இருந்தது. நாங்களும் அதன் போலவே காலை வைத்துகொண்டு அமர்ந்திருந்தோம். அமைதிக்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம். அதன் குடும்ப உறுப்பினர்கள் இடையில் வருவதும், போவதுமாக இருந்தார்கள். இவர்களால் நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் இவர்களின் சொந்தகாரர்கள் கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்து கொண்டார்கள். ஓர் பெண்ணின் பையை அவர் அம்மா வாங்குவதுபோல் வாங்கி உள்ளே இருக்கும் சாப்பாடு டப்பாவை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றது.

முதல் உயிரினம் லங்கூர் குரங்கு மற்றும் அதன் சொந்தம் என்பது நம் நாட்டுக் குரங்குகள் இவர்களின் செயல் செஞ்சி மலையில் அதிகமே. இவைகளுக்கு அணைத்து உணவுகளையும் கொடுத்து பழக்கபடுத்தி வைத்திருப்பதை, ஒரு குரங்கு காராசேவ் பொட்டலத்தை சாப்பிடுவதை பார்த்தபிறகே முடிவுக்கு வந்தேன்.
மஞ்சள் தொண்டை சின்னான், தென் இந்தியாவில் மட்டும் காணப்படகூடிய பறவை. தமிழ் நாட்டில் மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு தொடர்ச்சிமலை, செஞ்சி மலை, வல்லிமலை (வேலூர்), ஜவ்வாது மலை போன்ற மலைகளில் பார்க்கமுடியும். 

இங்கெல்லாம் சென்றால், பார்க்க முடிகிற பறவையா மஞ்சள் தொண்டை சின்னான் என்றால்? சிறிது சிரமமே. காரணம் மலை அடிவாரத்தில் பறவையை பார்க்க முடிவதில்லை. மலைகளின் மேல் கானப்படக்கூடிய பறவை என்பதால், மேல் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டால் பார்க்க முடிகிறது. செஞ்சியில் இதுபோலவே செய்தோம்.

மனிதர்கள் உடன் சந்திப்பை தவிர்த்து, பறவையுடன் ஓர் சந்திப்பு நடத்தலாம் என்ற நினைப்பு வந்தபொழுது, எங்கு செல்லலாம் என்ற யோசனை? அதில் செஞ்சி நினைவில் வந்தது. உடனே நண்பர் கலைமணி குறுக்கும், நெடுக்குமாக அதே நினைவில் வந்து சென்றார். நிஜத்திற்கு நான் வந்து, இந்த வாரம் செஞ்சிக்கு வருகிறேன் என்று அவரிடம் தொலைபேசியில் தெரிவித்த பொழுது வாருங்கள், வாருங்கள் என்றார். நண்பர் மாசிலாமணியுடன் செஞ்சியை நோக்கி பயணம்.

மஞ்சள் தொண்டை சின்னான் 

விடியற்காலை மிக அமைதியாகவே இருக்கிறது செஞ்சி. எந்த வித ஆரவாரம் இல்லாமல் ஒரு சில கடைகள் திறந்து இருந்தது. திருவண்ணாமலை, விழுப்புரம் திண்டிவனம் என்று பேருந்துகள் செஞ்சியில் இருந்து கிளம்பி கொண்டிருந்ததை, சிறிது நேரம் அங்கு உள்ள கடை முன்பு அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்துவிட்டே கோட்டைகள் இருக்கும் மலைகளை நோக்கி பயணம்.
இங்கு மஞ்சள் தொண்டை சின்னான் பறவை இருக்கிறது என்ற ஆர்வம் எங்களுக்கு மட்டுமே, மற்ற பயணிகளுக்கு ராஜா கோட்டை பற்றிய ஆர்வம் மட்டுமே. அவர், அவர்களுக்கு அவர் அவர்  வேலைகள் என்று நினைத்து கொண்டு, மலை ஏற காலை ஒன்பது மணிக்கு மட்டுமே அனுமதி என்பதால் அதன் எதிர் திசையில் இருக்கும் சாலையில் நடக்க சென்றோம்.

சண்டைக்கு முன்பு 
ஒரு தேன் சிட்டுக்கும், தகைவிலானுக்கும் என்ன பகை என்று தெரியவில்லை, இரண்டும் போருக்கு தயாரகி கொண்டிருந்தது. ரெடி, ஒன், டூ, த்ரீ என்று நான் சொல்லி முடிபதற்குள்  சண்டை போட தொடங்கி விட்டது. இரண்டும் நம் கைப்பிடி அளவே இருக்கிறது. இதுங்களுக்குள் என்ன பகை, எதை நினைத்து சண்டை என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.

மலை அடிவாரத்தில் நிறைய சிறு பறவைகள், இவைகளை மலை மேல் பார்க்க முடியவில்லை. அடிவாரத்திலேயே தன் வாழ்நாளை கழித்து கொண்டிருக்கிறது. இலைகள் இல்லாத மரத்தில் மூன்று புள்ளி ஆந்தைகள். இவை பகலில் தூங்கும் என்று பார்தால் தம்மை யார் பார்கிறார்கள் என்று நோட்டம் விடுவதற்கு அதற்கு நேரம் சரியாக இருந்தது. எந்த வித சலனமும் இல்லாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தது. வேண்டிய அளவு படங்களை எடுத்துகொள்ள அனுமதிக்கிறது. மிக அருகில் சென்றால் மட்டுமே பறந்து அடுத்த மரத்திற்கு சென்று டா, டா காட்டிவிடுகிறது.

சண்டை 
அதே மரத்தில் இருக்கும் மற்ற பறவைகள்- பச்சைக்கிளி ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது. மைனாக்கள் வழக்கம்போல் வருவதும், போவதுமாக இருந்தது. வீட்டு காக்கா, கருங் காக்கா இரண்டும் தன் வேலையில் கவனமாக இருந்தது. இவையெல்லாம் இலைகள் இல்லாத இந்த மரத்தை தங்களின் கெஸ்ட் ஹவுஸ் போல் பயன்படுத்திவருவதை பார்க்கமுடிந்தது.

புள்ளி புறா ஒன்று மட்டும் இலைகள்  உள்ள ஒரு மரத்தில், அடுத்து எங்கே செல்லலாம் என்ற யோசனையில் அமர்ந்திருந்தது. அதன் பக்கத்தில் இருந்த மின்கம்பியில் மூன்று மைனா குருவிகள் காலைவேளையில் சிலிர்ப்பாக அமர்ந்திருந்தது அதன் பக்கத்தில் தூக்கனாங் குருவி ஒன்று சிறியதாக தெரிந்தது.
புள்ளி ஆந்தை 
வழி நெடுக்க குரங்குகளின் நடமாட்டமும் உள்ளதால் நாம் எடுத்து செல்லும் அணைத்து பைகளையும் வாங்கி பார்க்காமல் நம்மை விடுவதில்லை. மலை ஏறும்போதே குரங்குகள் ஜாக்கிரதை என்ற பலகை நமக்கு தகவல் தருகிறது அதை பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை என்று மேல் செல்லும்பொழுது தெரிகிறது. குரங்குகள் பற்றி கவலை இல்லாமல் செல்பவர்களின் பைகள், உணவுகளை  எங்கு மறைத்து வைத்திருந்தாலும் அவை எடுத்துவிடுவதை தொடர்ந்து பார்த்து கொண்டிருந்தோம். கலைமணிக்கு இது பழக்கப்பட்ட இடம் என்பதால் குரங்குகளை நன்கு கையாண்டார் அதனால் நாங்கள் அமைதியாக பறவைகளை பார்த்து கொண்டிருந்தோம்.

மலையின் கீழ் நிறைய பறவைகளை பார்க்கமுடிந்தாலும், இரண்டு பறவைகளை பார்க்க மலை மேல் ஏறவேண்டும் என்பதால் மேல் நோக்கி நடந்தோம். நண்பர் கலைமணி செஞ்சி மலையில் குடியிருப்பவர். இவர் வீடு திருவண்ணாமலையில் இருந்தாலும் மஞ்சள் தொண்டை சின்னான்னை பற்றி ஆராயிச்சி செய்துவருவதால் பெரும்பாலும் இவர் இந்த மலைகளில் தன் வாழ்க்கையை நடத்தும் அளவுக்கு செஞ்சி மலையை கரைத்து குடித்திருக்கிறார்.

செஞ்சியை சுற்றி மொத்தம் நாற்பது மலைகள் உள்ளது. மஞ்சள் தொண்டை சின்னானை பார்பதற்கு இந்த நாற்பது மலைகளையும் ஏறி இறங்கியிருக்கிறார். எங்களை மலை மேலே  அழைத்து சென்று ஓர் இடத்தில் அமரவைதுவிட்டார். 

இங்கு இருந்தால் பறவையை பார்க்க முடியும் என்று சொன்னதை நாங்களும் கடைபிடித்து அமர்ந்திருந்தோம். சொல்லியபடியே மஞ்சள் தொண்டை பறவையின் குரல் கேட்க ஆரம்பித்தது. சுற்றி இருக்கும் மரங்களில் இருந்து தொடர்ந்து குரல் வந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த பாறையின் மேல் ஒரே ஓரு மஞ்சள் தொண்டை சின்னானின் தரிசனம்.

நீண்ட நேரம் எந்த வித கவலையும் இல்லாமல் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தது. நாங்கள் அதனை பார்த்தோம் ஆனால் அவை எங்கேயோ பார்த்துகொண்டிருந்தது. இவை வளர்ந்த மஞ்சள் தொண்டை சின்னான் இல்லை நடுத்தர பறவை. இவை இன்னும் வளர்ந்து துணையை தேடவேண்டும் என்று கலைமணி சொன்னார். நாங்கள் முதன் முதலாக மஞ்சள் தொண்டை சின்னானை பார்ப்பதால் ஒரு வித சந்தோசம். வெகு நேரம் பார்த்துகொண்டிருந்து படங்களை எடுத்து கொண்டிருந்தோம்.

மலைகளின் மேல் பகுதியில் வாழக்கூடிய பறவை என்பதால் கீழ் பகுதியில் இவற்றை பார்ப்பது மிக அரிது. ஆனால் “மே” மாதம், மலை மேல் தண்ணிர்  கிடைக்கவில்லையென்றால் மஞ்சள் தொண்டை சின்னன் கீழ் பகுதிக்கு வருகிறது. கீழ் பகுதியில் மற்ற சின்னான் வகைகள் இருப்பதால் இவற்றுக்கு இடையில் சண்டை ஏற்படவும் வாய்புண்டு. மிக சிறிய பறவை மஞ்சள் தொண்டை சின்னான். வளர்ந்த ஒரு பறவை இருபது சென்டிமீட்டர் அளவு மட்டுமே காணப்படும்

புள்ளி புறா 
பாறை இடுக்கில் இவை கூடு கட்டி, வருடத்திற்கு இரண்டு முட்டை இடுகிறது. இவற்றின் உணவு-அத்தி பழங்கள் ஆகும். இதன் குட்டிகளுக்கு புழுக்களை உணவாக தருகிறது. பெரும்பாலும் மஞ்சள் தொண்டை சின்னன் ஜோடியாக காணப்படுகிறது. சில சமயம் தனியாக இருந்தால், தொடர்ந்து குரல் கொடுத்து அதன் துணையை நோக்கி சென்றுவிடும். இவையெல்லாம் நண்பர் கலைமணியிடம் பேசி தெரிந்துகொண்டேன். குரல் கொடுத்து துணை தேடி செல்வதை நேரிலும் பார்த்தோம்.

இரைகொல்லி பறவைகள் அருகில் மஞ்சள் தொண்டை பறவை வாழ்கிறது. ஆனால் இந்த பறவையை இரைகொல்லி பறவை கொன்று சாப்பிடுவதை இதுவரை பார்த்ததில்லை. மற்ற சின்னான் பறவைகளை சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். மற்றும் வருடம் ஒரு முறை இடும் இரண்டு முட்டைகளையும் சரியாக பராமரித்து, இரண்டு குட்டிகள் அதில் இருந்து வருவதை பார்த்திருக்கிறேன். இதுவரை இதன் எதரி என்று எதையும் பார்த்ததில்லை என்ற தகவல்களை கலைமணி தந்தார்.

ஆனால் இவை IUCN குறியீட்டில் Vulnerable தரவரிசையில் இவற்றை பார்க்கமுடிவதால் இதன் எண்ணிக்கை எப்படி குறைகிறது என்று ஆர்வமாக படிக்க ஆரம்பித்தேன்.
 
ஆச்சரியமான செய்தி - மஞ்சள் தொண்டை சின்னான் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் இதனை பிடிக்கபடுவதாலோ அல்லது கள்ளவேட்டை செய்வதாலோ இவை குறைவதில்லை. இவற்றின் வாழிடம் அழிக்கபடுவதாலே இவை குறைகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். இவை வாழும் பாறைகள் வெட்டி எடுப்பதால், மலைகளை வெடி வைத்து தகர்பதால், சுரங்கம் தோண்டுவதால் இவை குறைந்துவருகிறது. கலைமணியும் இதையே சொன்னார் இவற்றை இரைகொல்லி பறவை பிடித்தோ, இவற்றின் முட்டையை மற்றவர்களால் அழிக்கபட்டோ, முட்டையில் இருந்து வரும் குட்டிகள் நன்கு வளராமல் இறந்தோ இதுவரை பார்த்தது இல்லை என்று சொன்னார்.


பச்சைக்கிளி
மஞ்சள் சின்னான்  இருந்த மலையில் பின்புறம் லங்கூர் வந்து அமர்ந்தது. முதலில் ஒன்று மட்டுமே எங்களை பார்த்து கொண்டிருந்தது. பின்பு அதன் குடும்ப உறுப்பினர்கள் வர தொடங்கிவிட்டனர். ஆனால் அனைவரும் கொஞ்ச நேரத்தில் எங்களை பார்க்க பிடிக்காமல் கிளம்பிவிட்டனர். நாங்களும் இதை கவுர பிரச்சனையாக எடுத்து, அவர்களை பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து மேல் நோக்கி நடந்தோம்.  

வல்லூறு பார்பதற்கு இன்னும் மேல் நோக்கி செல்லவேண்டும் என்பதால் சென்று கொண்டிருந்தோம். மேலே சென்று மிக பெரிய பாறை ஒன்றின் எதிரில் அமர்ந்துகொண்டோம். இங்கு தான் பொறி வல்லூறு(Peregrine Falcon) வரும் என்று நண்பர் சொன்னதால் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தோம். ஒரு பொறி வல்லூறு மிக உயரமான பாறை இடுக்கில் வந்து அமர்ந்தது. தொலைவில் இருந்ததால் பைனாகுலர் வழியாக பார்த்து ரசித்து கொண்டிருந்தோம். அதன் குட்டி உள்ளே உள்ளதா என்று தெரியவில்லை. பாறைக்கு உள்ளே செல்வதும், வருவதுமாக காணப்பட்டது. மிக தொலைவில் இருந்ததால் படம் எடுப்பதிலும் சிரமம் இருந்தது. இருந்தாலும் அதன் முகபகுதியை படம் எடுத்துவிட்டோம்.

பொறி வல்லூறு

இன்னும் சிறிது நேரம் அங்கேய காத்திருந்தபொழுது வேறு ஒரு பொறி வல்லூறு வந்தது. இவையும் தொலைவில் இருந்தாலும் முழுவதமாக அதன் உடலை பார்க்க முடிந்தது. பல வருடங்கள் முன்பு இங்கு பாறு கழுகுகளை பார்க்கப்பட்டதாகவும் அவை சென்றபின்பு இந்த வகை இரைகொல்லி பறவைகள் இங்கு காணப்படுகிறது என்று நண்பர் குறிபிட்டார்.
பொறி வல்லூறு(Peregrine Falcon) மட்டும் இங்கு இல்லாமல் பாம்பு கொண்டை கழுகு(Serpent crested Eagle), செந்தலை வல்லூறு(kestrel) போன்ற இரைகொல்லி பறவைகள் பார்க்கமுடியும் ஆனால் நாங்கள் சென்றபொழுது பொறி வல்லூறு மட்டுமே கண்ணில்பட்டது. மிக வேகமாக பறக்கும் திறனுடைய பறவைதான் பொறி வல்லூறு (Peregrine Falcon).
கற்குவியல்  
செஞ்சி கோட்டை அமைத்திருக்கும் மலை கொஞ்சம் விசித்திரமானது மற்றும் ஊரை சுற்றி இருக்கும் மலைகளில், நிறைய கற்களை வெட்டி குவியலாக கொட்டியது போல்  இந்த மலைகள் காணப்படும். இதுவரை இதை போல் வேறு எங்கும் பார்த்ததில்லை.
செஞ்சி- ஒரு பெரிய கிராம சூழலில் அமைதியாக இருப்பதால், கோட்டையை விட வேறு என்ன சிறப்பு இருக்கும் என்று நாம் யோசித்தால் முட்டை மிட்டாய் கடை பிரபலம் என்று தெரிந்தது. அதனால் அங்கு செல்பவர்கள் முட்டை மிட்டாய் வாங்கி சாப்பிடுங்கள் என்று இங்கு நடுவில் சொல்லிவிட்டு மலை ஏற தொடங்குவோம்.
வெளிநாட்டு பயணிகள், நிறைய பேர்களை பார்க்கமுடிந்தது. இந்தியர்களுக்கு பதினைந்து ரூபாய், வெளிநாட்டவர்க்கு இருநூறு ரூபாய். காமெராவுக்கு டிக்கெட் இல்லை ஆனால் வீடியோ கேமரா கொண்டுசென்றால் டிக்கெட் வாங்கவேண்டும். மதியம் மூன்று மணி மேல் மலை ஏற அனுமதியில்லை அங்குள்ள பலகையில் இவற்றை பார்க்கலாம்.
உள்ளே புல்தரைகள் உண்டு, அதில் குழந்தைகள் விளையாடுவதற்கு எந்தவித விளையாட்டும் இல்லை. சும்மாவே குழந்தைகள் சுற்றி வரவேண்டும். சென்னை  பூங்காவில் காணப்படும் சறுக்காமரம், ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரங்கள் இங்கு இருந்தால் உள்ளூர் மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருவார்கள். மற்றும் சாப்பிடுவதற்கு எந்தவித கடையும், அதற்கான வசதியும் இல்லாதது மிக பெரிய குறை.
ஏழு புள்ளி கரப்பான்பூச்சி 
பெரும்பாலானோர் மலை உச்சிவரை ஏறுவதில்லை சிறிது துரம் ஏறி, கால்வலியில் இறங்கிவிடுகிறார்கள். எதை நோக்கி மேலே செல்கிறோம் என்று அவர்களுக்கு தெரியவில்லை. பறவை பார்க்க செல்பவர்கள் நன்கு தெரிந்த நபருடன் சென்று,  ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டால் மஞ்சள் தொண்டை சின்னான், பொறி வல்லூறு போன்றவற்றை பார்க்கமுடிகிறது. இல்லையென்றால் சுற்றி, சுற்றி வந்து, முயற்சி செய்து பார்க்கவேண்டும்.
மலை ஏறி பாதிக்கு மேல் சென்றாலே சின்னானின் குரல் கேட்டுவிடுகிறது. சின்னான் மற்றும் இரைகொல்லி பறவையை தவிர வேறு எந்த பறவையும் மேலே பார்க்க முடிவதில்லை. நிறைய வண்ணத்துபூச்சிகள் நம்மை சுற்றி வலம்வருகிறது. வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் வந்தால் நிச்சயம் மகிழ்வார்கள். பல வண்ணத்துப்பூச்சிகள்  இருந்தாலும் plain tiger வண்ணத்துபூச்சி மட்டுமே எனக்கு தெரிந்தது அதனால் அதனை உற்று கவனித்து, பிறகு ஏழு புள்ளி கரப்பான்பூச்சி இருந்த பக்கம் பார்வையை திருப்பினால் எங்கும் ஓடாமல் கரப்பான்பூச்சி அதன் நிலையிலேயே இருக்கிறது. அருகில் நாம் இருப்பதை கொஞ்சமும் மதிக்கவேயில்லை, இருந்தாலும் அதனை மிதிக்காமல் நகர்ந்தோம்  
பொன்னிற பல்லி 
ஒரு பாறை இடுக்கில் நம்மை அழைத்து சென்று டார்ச் அடித்து இங்கு பாருங்கள் என்றார். சிறிய தங்க பல்லி(Golden Gecko) ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது. எங்களை பார்த்ததும் பாறை இடுக்கில் சென்று ஒளிந்துகொண்டு. வெளியேவரமாட்டேன் என்றதை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து வெளியேறினோம்.
Rock Agama ஓணான் ஒன்று ஒரு பாறையின் மேல் நகராமல் இருந்ததை பார்த்து அருகில் சென்றோம். வாருங்கள்-வாருங்கள், வந்து வேண்டும் அளவுக்கு படங்களை எடுத்துகொள்ளுங்கள் என்று வாய் திறந்து அவை சொன்னது. அதன் பிறகே படங்களை எடுத்தோம். இது போன்ற இடங்களுக்கு செல்லும்பொழுது பறவை மட்டும் இல்லாமல் மற்ற உயிரினங்களை உன்னிப்பாக  கவனிக்கவேண்டும் என்பது புரிகிறது. சிறிது கவனம் சிதறினாலும் நம் காலடி பட்டு நிறைய உயிரினங்கள் இறக்கவாய்புண்டு.


முடிவில் நினைத்துபார்த்த பொழுது புள்ளி வல்லுறு, மஞ்சள் தொண்டை சின்னான், புள்ளி புறா, வண்ணத்துப்பூச்சிக்கள், ஏழு புள்ளி கரப்பான்பூச்சி, பல்லி வகைகள், ஓனான் வகைகள் என்று கலவையாக இந்த பயணம் அமைந்திருந்தது நினைவுக்கு வந்தது.
சுற்றிமுடித்து கீழ் நோக்கி இறங்கியபொழுது மணி 12.30. வழியில் வரும் ஷேர் ஆட்டோவில் ஏறிகொண்டால், செஞ்சி பஸ் நிலையத்திற்கு பத்து ரூபாய் வாங்கி நம்மை இறக்கி விட்டுவிடுகிறார்கள். வசந்தபவனில் உயர்தர சைவ சாப்பாட்டை 65 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு சென்னை பேருந்தை நோக்கி சென்றால், அங்கு அளவுக்கு அதிகமான மக்கள். என்ன செய்யலாம் என்ற யோசனையில், திண்டிவனம் போய் செல்வதுதான்  நன்று என்று ஒரு மனதாக தீர்மானம் போட்டு, திண்டிவனத்தில் இறங்கினோம். மாலை நான்கு மணிக்கே தாம்பரத்தை அடைந்துவிட்டாலும், வீடிற்கு ஆறுமணிக்குதான் செல்ல முடிந்தது.  நம், நம், நம், நம் சென்னை போக்குவரத்து பற்றி நமக்கு தெரிந்த விஷயம்தானே.

சுபம்!
இரண்டு மணிகள்- கலைமணி, மாசிலாமணி 


4 comments:

 1. Excellent narrative. Thanks for taking me to Senji through your writing. Kind regards,
  chandru

  ReplyDelete
  Replies
  1. Thank you sir, must you have to visit....

   Delete
 2. செஞ்சி கோட்டையை கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு உயிரினங்கள் வாழ்கின்றன என்பதை பார்த்து வியந்து போனேன். My thanks are due to Mr.Kalaimani and Mr.Chezheyan. Every one should visit this place to learn more about our architecture and biodiversity.

  ReplyDelete