Sunday 20 November 2016

TAMIL BIRDERS MEET – 2016



இந்த குளத்தில் நிறைய பவளக்கால் உள்ளான், மடையான், உண்ணிக் கொக்கு இருப்பதை பார்க்க முடிந்தது. இரவிலும் பார்த்து பறவைகள் இருப்பதை உறுதி செய்துகொண்டேன் ஏன்னென்றால் இந்த குளத்தின் மேல்தான் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அமைந்து உள்ளது.

என்னுடைய வாட்சப்பில் ஒரு வாசகம் இப்படி இருந்தது - அணுகுண்டு போட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று நீங்கள் (மனிதர்கள்) பயப்படுகிறீர்கள் அதே பட்டாசு வெடித்தால் எங்கள் (பறவைகளுக்கு) உயிருக்கு ஆபத்து
என்று ஏன் நீங்கள் யோசிப்பதில்லை என்ற வரி இரண்டாவது முறையாக  உண்மையானது இந்த குளத்தை பார்த்த பிறகு. நம் வசதிக்காக பேருந்து நிலையம் பறவைகள் இருக்கும் இடத்தில அமைத்து விட்டோம் ஆனால் இதுவரை அங்கு வாழும் பறவைகள் எங்கே போகும் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது?. 

காலை எட்டு மணி அளவில் பேருந்து நிலையத்தில் தேநீர் மற்றும் காலை உணவை முடித்து விட்டு பாபநாசம் செல்லும் பேரூந்து நடத்தினரிடம் ப்ரான்சேரி பஸ் நிறுத்தம் வந்தால் சொல்லுங்கள் என்று அமர்ந்து விட்டேன். சிறிது நேரத்திலேயே ப்ரான்சேரி பஸ் நிறுத்தம் வந்துவிட்டது. அங்கிருத்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்தான் PSN.Eng.College. அங்குதான் தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் பறவை ஆர்வளர்கள் மகிழ்ச்சியாக இந்த நேரம் பேசி கொண்டிருப்பார்கள், ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகிகொண்டிருப்பார்கள்.

நான் மற்றும் அந்த காலேஜ் செல்லும் மாணவர்கள் என்று ஆளுக்கு பத்துரூபாய் கொடுத்து ஷேர் ஆட்டோவில் காலேஜ் சென்று பறவை ஆர்வலர்களுடன் இணைந்து விட்டேன். விடுதி வெளியே சாந்தாராம் சார் மற்றவர்களுடன் பேசி கொண்டிருந்தார். நான் அவருக்கு என்னை அறிமுகம் செய்து கொண்டிருந்தபொழுது நீங்கள் அறை எண் 303ல் தங்கிக்கொள்ளலாம் என்று வருபவர்களை ஒருங்கிணைத்து கொண்டிருந்தவர் சொன்னார். சொன்னது மட்டும் இல்லாமல் கூடவே வந்து அறையை காண்பித்து விட்டு, ரெடியாகி வாருங்கள் காலை உணவு தயாராக இருக்கிறது என்றார். இங்கு காலை உணவு இருக்கும் என்று தெரியாமல் பஸ் நிலையத்திலேயே கொஞ்சம் சாப்பிட்டு விட்டேன்.

யாரை பார்ப்பது, எப்படி தங்குவது, நமக்கான அறை இருக்குமா என்று முதலில் யோசித்தேன்
ஆனால் மிக கச்சிதமான ஒருங்கிணைப்பு, சரியான கவனிப்பு மற்றும் ஒரே மாதிரியான உபசரிப்பு இருப்பதை கடைசி வரை பார்க்க முடிந்தது. நமக்கு என்ன உணவோ அதுவே வந்திருக்கும் பேச்சாளர்களுக்கும் இருப்பதை பார்க்க முடிந்தது சமத்துவம் என்ற வாசகம் இங்கே உண்மையானது.

தியடோர் பாஸ்கரன் சார்க்கு உணவை விட தேநீரே அதிகம் விருப்பும் என்று நினைக்கிறன். சகஜமாக எல்லோரிடமும் பேசி செல்கிறார். ரமணா படத்தில் விஜயகாந்து தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை “மன்னிப்பு” என்று ஒரு வசனம் பேசுவார். அதே போல் ஆங்கிலத்தில் எனக்கு DEVELOPMENT (வளர்ச்சி) என்ற வார்த்தை பிடிக்காது என்று கோபத்துடன் வெளிப்படுத்தினார் அதற்கான காரணத்தையும் விளக்கி சொன்னார்.

அறையில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றேன் மிக பெரிய ஏசி ஹால் என்பதால் மின்விசிறி ஓடும் இடத்தில் அமரவேண்டும் என்ற பிரச்சனை கடைசிவரை இல்லை. MNS
President KV சுதாகர் சார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆரம்ப பேச்சுக்கள் முடிந்து முதல் தலைப்பாக  Wetland Birds of Kanyakumari என்பதை பற்றி பேச கன்யாகுமரியை சேர்ந்த Robert Grubh (Dr.Salim Aliயுடன் பணிபுரிந்து உள்ளார்)அவர்கள் வந்தார். இவர் எழுதிய Wetland Birds of Tamilnadu என்ற புத்தகத்தை சில மாதங்களுக்கு முன்புதான் நான் வாங்கினேன். இந்த புத்தகம் வாங்குவதற்கு தொலைபேசியில் இவர் மனைவி Shilaja R Grubh அவர்களிடம் பேசும்பொழுது கண்யாகுமரி வாருங்கள் நிறைய பறவைகள் பார்பதற்கான இடங்கள் உள்ளது என்று சொன்னார். அப்பொழுது பறவைகள் மேல் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிந்தது. நேரில் பார்த்த பிறகு தான் தெரிந்தது வயதானவர்கள் இந்த வயதிலும் பறவைகளுக்காக தங்கள் வாழ்கையை செலுத்துகிறார்கள் என்று.


நிகழ்ச்சிக்கு யார் யார் வந்திருந்தார்கள் என்று பார்க்கும் பொழுது பெரிய ஆச்சரியத்தையே தந்தது. பெரியவர்கள், இளைஞர்கள் வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆறாவது, ஏழாவது படிக்கும் மாணவ மாணவிகளும் வந்திருப்பது உண்மையில் ஆச்சரியமே. அதிலும் உணவு இடைவேலையில் சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே சிறுவர்கள் அங்கும் இங்கும் செல்வதை பார்த்து அங்கு சென்றேன் அவர்கள் கையில் Birds Field Guide புத்தகத்தை வைத்து பறவைகளை இனம்கண்டு பார்த்து ரசித்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அந்த Birds Field Guide பழைய புத்தகமாகவே மாறிவிட்டிருந்தது அந்த அளவுக்கு சிறுவர்கள் அவற்றை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனக்கும் நிறைய பறவைகளை காண்பித்தார்கள்.

இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று West Bengalலில் இருந்து ஒரு பெண் வந்திருப்பது உண்மயில் ஆச்சரியமே. நிறைய குடும்ப தலைவிகளும் வந்திருந்தார்கள்.கன்னியாகுமரியில் இருந்து ஏழாவது படிக்கும் மாணவி தன்னுடைய பறவை அனுபவங்களை சொன்னது மிக்க நன்று.
தியடோர் பாஸ்கரன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் ஆழமாக கருத்துக்களை முன்வைத்தார். சூலூர் விமானநிலையத்தில் விமான ஓட்டி பார்த்த காண மயிலை (Great Indian Bustard) இவர் தேடி சென்றதும், Living Planet 2016 அனைவரையும் பார்க்க சொன்னது, தெளிந்த நீர் இல்லை என்றால் கருப்பு வெள்ளை மீன் கொத்தி பார்க்க முடியாது என்றும் கருத்துகளை கூர்மையாக சொன்னார்.  

சாந்தாராம் சார் இந்த நிகழ்ச்சயில் தான் முதன் முதலில் பார்த்தேன் சிலபேருக்கு மட்டுமே சிரித்த முகம் என்பார்கள் அது நுறு சதவிகிதம் சாந்தாராம் சாருக்கு பொருந்தும். அமைதியாக, சிரித்த முகத்துடன் தன் கருத்துகளை சொல்லிக்கொண்டிருதார். இவருடைய ஒரு பேட்டியில் எங்கள் வீட்டில் 50 பறவைகள் வரை பார்க்க முடியும் ஆனால் இப்பொழுது 5க்கு மேல் பார்க்க முடியவில்லை. 1970ம் வருடம் பறவைகளை அடையார் முகத்துவாரத்தில் பார்க்க செல்வேன் அங்கு மின்சிட்டை பார்த்துள்ளேன் இந்தியாவிலேயே மின்சிட்டைப் பற்றிய மூன்றாவது பதிவு என்று குறிப்பிடுகிறார்.

ஜெகன்நாதன் சாரையும் இப்பொழுதுதான் சந்திகிறேன். ஒரு இருபத்து ஐந்து வயது இளைஞர் வேகம் அவர் உடம்பில் பார்க்க முடிந்து. அங்கும் இங்கு ஒரே வேகமான நடை இருந்தது. என் பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன் என்ன சின்ன பையன் போல் ஸ்லிம் ஆக இருக்கிறாரே என்றதற்கு காட்டுக்குள் செயல்படுவதற்கு ஏற்றாற்போல் உடம்பை வைத்துள்ளார் என்றார். தெரிந்தவர், தெரியாதவர்கள் என்று பார்க்காமல் அனைவரிடமும் சகஜமாக பேசி கொண்டிருந்தார். ஒருவர் அவரிடம் வால்பாறையில் பறவைகளை பார்க்க வேண்டும் என்பதற்கு உங்கள் கேள்விக்கு இரவில் பேசுவோம் என்று வேலைகளை பிரித்து செயல்பட்டு கொண்டிருந்தார். ஆச்சரியம் சுத்தமா தமிழில் தன் கருத்துகளை எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார். தன்னை  அறிமுகபடுத்தும் பொழுது இப்படி ஆரம்பித்தார் என் பெயர் ஜெகன்நாதன் பறவை ஆர்வளர் என்று சொல்லி மைக்கை அடுத்தவரிடம் கொடுத்தார்.

பறவைகளை நோக்குவதற்கு அடுத்து நாள் காலை 6.30மணிக்கு கிளம்பினோம் 35 பறவைகளுக்கு மேல் பார்த்தது மகிழ்ச்சியை தந்தது. நான் சந்திரசேகர் சார், ராஜபாளையத்தில் இருந்து வந்திருந்த விஷ்ணு மற்றும் அவர்கள் நண்பர்கள் என்று ஒரு குழுவாக பறவைகளை பார்க்க சென்றோம்.

 நிறைய பறவைகளை இங்கு முதன் முதலில் பார்த்தேன் அதை Lifer என்பார்கள்

பார்த்த பறவைகள் :

1.புள்ளி ஆந்தை (Spotted Owlet)
2.பஞ்சுருட்டான் (Green Bee-eater)
3.நீல வால் பஞ்சுருட்டான் (Blue tailed Bee-eater)
4.கொண்டலாத்தி (Common Hoope)
5.தகைவிலான் (Barn Swallow)
6.தையல்சிட்டு (Tailor bird)
7.வால்காக்கை (Rufous Tree pie)
8.சாம்பல் கதிர்க்குருவி (Ashy prinia)
9.சோளப்பட்சி (Rosy Starling (juv)
10.குருட்டு கொக்கு (Pond heron)               
11.செம்போத்து (Southern Coucal)
12.உண்ணிக்கொக்கு (Cattle Egret)
13.வல்லுறு (Shikra)        
14.கருஞ்சிட்டு (Indian Robin)                        
15.ஊதா தேன்சிட்டு (Purple Sunbird)          
16.ஊதாபிட்டு தேன்சிட்டு (Purple-rumped sunbird)
17.குயில் (Asian koel)
18.பனங்ககாடை (Indian Roller)                   
19.கவுதாரி (Grey Francolin)            
20.நீல மயில் (peafowl -male/female)
21.சின்ன தவிட்டு புறா (Lauging Dove)                    
22.கம்புள் கோழி (White brested Water hen)                           
23.பழுப்பு கீச்சான் (Brown Shrike)                               
24.வயல் நெட்டைக் காலி (Paddy field Pipit)
25.புதர் வானம்பாடி (Jeordon’s Bushlark)   
26.சேற்றுப் பூனைப் பருந்து (Marsh Harrier)                         
27.கருங்கொண்டை நாகணவாய் (Braminy Starling)           
28.மஞ்சள் மூக்கு ஆட்காட்டி(Yellow wattled  lapwing)
29.நாகணவாய் (Common myna)
30.வீட்டு காக்கை (House crow)
31.பழுப்பு ஈப்பிடிப்பான் (Asian Brown Flycatcher- male/female)                        
 32.சிகப்புமூக்கு ஆட்காட்டி (Red Wattled lapwing)
33.கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied kingfisher)
34.தவிட்டு குருவி (yellow billed babbler )
35.சிறிய நீர்காகம் (Little Cormorant)    
36.செம்பருந்து (Brahminy kite (juv)  

            
ஒரே நேரத்தில் இவ்வளவு பறவைகள் இப்பொழுதுதான் நான் பார்த்தேன்.
 
இந்த இடத்தில சந்திரசேகர் சார் பற்றி சொல்லவேண்டும்.

பெரும்பாலானோர் அடிக்கடி சொல்லுவார்கள் சீக்கிரம் வேலையில் இருந்து விலகி விரும்பியதை செய்யவேண்டும் என்று ஆனால் நிஜத்தில் நூற்றில் ஐந்து பேர் கூட சொல்லியபடி செய்வதில்லை. தன்னுடைய 49வது வயதில் (2013) தன் பணியில் இருந்து விலகி தான் விரும்பியதை தொடர்ந்து செய்துகொண்டிருகிறார். ஒரு குழந்தையின் குதுகலம் அவரிடம் எந்த நேரமும் பார்க்க முடியும். இரண்டு நாள் நிகழ்ச்சியில் நிறைய பள்ளி மாணவர்களுக்கு, சிறு பிள்ளைகளுக்கு பொறுமையாக பறவைகளை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சுற்றுச்சூழல் பற்றிய இளங்கலை பாட பிரிவில் சேரப்போகிறார்.

Photographyயில் துளியும் ஆர்வமாக இல்லாதவர் ஆனால் இதுவரை இந்தியாமுழுவதும் 350 பறவைகள் மேல் பார்த்திருக்கிறார். ஒரு முறை இவர் பறவை நோக்க சென்றபொழுது இரண்டு பறவைகள் கூடு கட்டிகொண்டிருந்தது அதன் குட்டிகளும் அந்த கூட்டிற்கு தேவையான பொருட்களை கொண்டுவருவதை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார். மொத்த பறவை குடும்ப உறுப்பினர்களும் கூடு கட்டுவதை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டேன் ஆனால் இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை என்று சொன்னார். 



நிகழ்ச்சிக்கு வந்த பலபேரிடம் எந்த பறவை புத்தகத்தை Reference செய்கிறீர்கள் என்று  கேட்டதற்கு அதிகம் பேர் Birds of Indian Subcontinent by Grimmett Richard, Carol Inskipp, Tim Inskipp- 2nd Edition   பயன்படுத்துவதாக சொன்னார்கள். பெரும்பானவர்கள் கையிலும் இதே புத்தகத்தை பார்க்க முடிந்தது. இரண்டாவது பெஞ்சில் அமர்திருப்பவர்கள் மேஜையில் Birds of TamilNadu by Rathanam புத்தகத்தை பார்த்தேன். சந்திரசேகர் சார் Raptors Referenceக்காக Birds of Prey of Indian subcontinent by Rishad Naoroji புத்தகத்தை பார்பதாக சொன்னார். Birds of Indian subcontinent  by Krys Kazmierczak என்ற புத்தகத்தை WestBengal இருந்த வந்த பெண்ணிடம் இருந்தது. ஆனால் Grimmett புத்தகமே பெரும்பாலுருடைய தேர்வாக இருக்கிறது.

பிணம்தின்னி கழுகுகள் என்று அழைக்கப்படும் பாறு கழுகுகள் குறைந்து விட்டதற்கான காரணத்தை கோவை அருளகம் அமைப்பை நடத்தும் சு.பாரதிதாசன் சார் மிக அருமையாக, விலாவரியாக பாடம் எடுப்பதுபோல் சொல்லிக் கொண்டிருந்தபொழுது மழை வந்தது அது அவருக்கு மிக வசதியாக போனது மதிய சாப்பாடு நேரம் இப்பொழுது பாறு கழுகுகள் பற்றி சொன்னால் கேட்பார்களா என்று யோசித்தவருக்கு மழை அதற்கு வழி வகை செய்துகொடுத்துவிட்டது. அனைவரும் கேட்டு விட்டே சாப்பிட சென்றோம்.

பாறுகழுகுகளை பாதுகாக்க அவர் நண்பர்கள் அம்சா மற்றும் சக்திவேல் அவர்கள் செய்யும் செயல்கள் உண்மையில் பாராட்டவேண்டிய விஷயம். Diclofinac மருந்தை பயன்படுத்தாதீர்கள் என்று ஒவ்வொரு மருந்து கடை முன்பும் தன்னுடைய வண்டியை அவார்கள் பார்வைக்கு படும்படி நிறுத்திவிடுவேன் என்றார். அவர் வண்டி பின் கண்ணாடியில் “x” குறி போட்ட Diclofinac மருந்து படம் ஒட்டியுள்ளார்.

நிறைய புத்தககங்கள் ஹாலுக்கு வெளியே விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். அதில் சில புத்தககங்கள் ஏற்கனவே வாங்கியிருந்தேன். Early bird அமைப்பு, பறவைகள் பற்றி சிறு கையேடு(pamphlet) போல் வெளியிட்டிருந்தார்கள் அதில் Birds of Penisular india  கையேட்டை(Pamphlet) வாங்கினேன். MNS President K.V.Sudhakar சார் இரண்டு கையேட்டை வாங்கினார். குழந்தைகள் கற்றுகொள்வதற்கு இந்த கையேடு சிறந்ததாக இருக்கும். இது போல் பறவைகள் புத்தகங்கள், பத்திரிக்கைகள், கையேடு, பறவை அட்லஸ் இவை அனைத்தும் ஒரு சேர கிடைக்க ஒரு இடம் (Flatform) இருந்தால் வசதியாக இருக்கும் என்று தோன்றியது. இப்பொழுது onlineல் நிறைய website சென்று பார்க்க வேண்டியுள்ளது ஒரே இடத்தில எல்லாம் கிடைப்பதில்லை.

முதல் நாள் இரவில் சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக்கொண்டும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டும் இருந்தார்கள். சாந்தாரம் சார், தியடோர் பாஸ்கரன் சார், ஜெகந்நாதன் சார் என்று அவர்களின் அனுபவங்களை கேட்க நிறைய பேர் அவர்களை சுற்றி நின்றிருந்தார்கள். தங்கும் விடுதிக்குள்ளேயே சிறு Conference Hall உள்ளது அதில் பறவைகள் பற்றிய Documentry படம் ஓடி கொண்டிருந்தது அதை நிறைய பேர் பார்த்து கொண்டிருந்தார்கள். இப்படி அன்றைய இரவு பேசியும், பார்த்தும் கழிந்தது.

நிறைய சிறு இயற்கை மற்றும் பறவை அமைப்புகள் நடத்தும் மனிதர்கள் அவர்களின் நண்பர்கள், தென்காசி, ராஜபாளையம், கூடங்குளம், கன்னியாகுமரி, நெல்லை என்று தென்மாவட்டத்தில் இருந்து நிறை பேர் வந்திருந்தார்கள். அதில் ராஜபாளையத்தில் இருந்து வந்திருந்த விஷ்ணு மற்றும் அவர் நண்பர்கள் பறவை பார்ப்பதையும் தாண்டி பறவைகளுக்கு தங்களுடைய பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள். கூந்தங்குளம் சூப்பர்ஸ்டார் பால்பாண்டி முழுநாளும் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தார். அவரை பற்றிய Documentry வாங்கவேண்டும் என்று நினைத்தேன் கிடைக்கவில்லை. அவரிடம் கேட்டேன் கூந்தங்குளம் வந்தால் சொல்லுங்கள் தருகிறேன் என்றார். சென்னையில் எங்கு கிடக்கும் என்று தெரியவில்லை. 

இரண்டு நாள் எடுக்கவுள்ள தலைப்புக்கள் மிக அருமையாக தயாரிதுள்ளார்கள்

உதாரனத்திற்கு சில :

1.Pelagic bird survey in Tamilnaduஉண்மையில் இப்படிப்பட்ட பறவைகள் எல்லாம் இருக்கிறது என்பதை அங்கு சென்ற பிறகே தெரிந்து கொண்டேன்.

2.introduction e-bird எதிர்காலத்தில் பறவைகள் இந்த உலகத்தில் இருந்தது என்று சொல்வதற்கு ஆதாரமாக இருக்கின்ற வலைத்தளம். 

3.Tips for identifying Warbler, Raptor, Waders, Larks, pipits – இவ்வகை பறவைகளை இனம் காண நிறைய நுணுக்கங்கள் உள்ளது. இன்னும் நிறைய பயிற்சிகள் எனக்கு தேவை என்பதை மட்டும் தெரிந்துகொண்டேன். 

4. How to count Bird-இந்த தலைப்பை பற்றி சாந்தாராம் சார் எடுத்தார் அறிவியல் முறையில் நிறைய வழிமுறைகள் உள்ளது என்று தெரிந்தது. 

5.Birds of Tamilnadu- இந்த தலைப்பு மட்டும்தான் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். 

மூன்றாம் நாள் காலையே ஊரில் இருக்க வேண்டும் என்பதால் இரண்டாம் நாள் மதியம் 3.30 மணிக்கு கிளம்பிவிட்டேன் அதற்கு மேற்ப்பட்டு நடந்தது எதுவும் எனக்கு தெரியாததால் அவற்றை பற்றி எழுதவில்லை.

மஞ்சள் மூக்கு ஆட்காட்டி பறவை இருந்த இடம்
என்னுடைய Bagகை எடுத்து கொண்டு விடுதியை விட்டு வெளியே வந்தேன். என்னுடன் நண்பர் மாசிலாமணியும் வந்தார். கல்லூரியில் இருந்து கூட்ரோடு சென்று திருநெல்வேலி செல்லவேண்டும் அன்று Sunday என்பதால் காலேஜ் விடுமுறை கூட்ரோடு செல்ல எந்த ஆட்டோவும் இல்லை என்ன செய்யலாம் என்று யோசித்ததற்க்கு இரண்டு கிலோமீட்டர் தான்  நடந்தே செல்லலாம் வழியில் ஆட்டோ வந்தால் ஏறிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அதைத்தவிர வேறு முடிவெல்லாம் பெரியதாக எடுக்காமல் நடக்க ஆரம்பித்தோம்.

போகும் வழியில் பறவைகளை பார்த்து கொண்டே சென்றோம் அப்பொழுது ஒரு கார் எங்கள் அருகில் வந்தது. இந்த நிகழ்சியில் நாங்கள் கலந்து கொண்டவர்கள் என்று தெரிந்து எங்களை ஏற்றிகொண்டார். Nellai Natural Club ஒருங்கிணைப்பாளர் மற்றும் நெல்லையில் வியாபாரம் செய்யும் திரு.ஹரி பிரதன் என்பவர்.

இப்பொழுது நான் மற்றும் நண்பர் மாசிலாமணிக்கு திருநெல்வேலி வரை செல்வது சுலபமாக மாறிவிட்டது. பேசிக்கொண்டே சென்றோம் பேச்சின் இடையில் அல்வா எங்கு வாங்கலாம் என்ற நாங்கள் கேட்டதற்கு ஜங்ஷன் பக்கத்தில் சாந்தி அல்வா கடையில் வாங்குங்கள் நன்றாக இருக்கும். ஆனால் சாந்தி பெயரில் நிறைய அல்வா கடைகள் இருக்கிறது அதனால் St.Marys Medical Shop பக்கத்தில் இருக்கும் சாந்தி அல்வா கடையில் வாங்குங்கள் மற்றும் அந்த கடை முன்பு நிறைய பேர் இருப்பார்கள் அதனால் சுலபமாக கண்டுபிடிக்கலாம் என்று Idea தந்தார் அங்கு செல்வதற்கு வசதியாக எங்களை பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றார். நல்ல மனிதர் வாழ்க.

நாங்கள் அங்கு சென்று பார்த்தல் அவர் சொன்னது போல் ஐந்து, ஆறு சாந்தி அல்வா கடைகள் இருந்தது. கண்களை சுழற்றி பார்த்ததில் முப்பது பேர்கள் மேல் ஒரு கடையில் இருந்தார்கள் இதுதான் நாம் வாங்கவேண்டிய கடை என்று முடிவு செய்தால் இந்த கூட்டத்தில் எப்படி வாங்குவது என்ற குழப்பம் வேறு இருந்தது. திருப்பதிக்கு சென்று லட்டு வாங்காமல் வருவது எப்படி தெய்வ குற்றமோ அதேபோல் நெல்லை சென்று அல்வா வாங்காமல் வருவதும் தெய்வகுற்றமாகும் என்ற நினைப்பு வேறு வந்தது.

நண்பர் மாசிலாமணியிடம் bagயை கொடுத்துவிட்டு உள்ளே புகுந்து வெளியே அல்வாவோட
வந்தேன். எங்களுக்கு வேறு எங்கும் கடைகள் இல்லை என்று பெரிய பேப்பரில் எழுதி ஓட்டியிருந்தார்கள். மற்ற கடைகளுக்கு வேறு பெயர் வைத்தாவாவது யாரவது வந்து வாங்குவார்கள் என்று நண்பர் சொன்னார். சரிதான் ஒருத்தர் கூட மற்ற கடை முன்பு இல்லை.

தேநீர் சாப்பிட்டு விட்டு புதிய பேருந்து நிலையம் சென்று இறங்கிய பிறகு பார்த்தால் அங்கேயும் சாந்தி அல்வா கடை இருந்தது. என்னடா இது என்று சுற்றி பார்த்தால் நிறைய சாந்தி பெயரில் அல்வா கடைகள் இருந்தது. சரி இதை விட கூடாது என்று நானும் பொறுமையாக எல்லா கடையும் எண்ணிவிட்டேன் (மொத்தம் 20 சாந்தி அல்வா கடை) பஸ்சில் ஏறி கண் மூடி அமர்ந்தால் கனவெல்லாம் சாந்தி அல்வா கடையே வந்தது.  

-செழியன்
உங்கள் கருத்துக்களை தெரிந்துகொள்ள 

lapwing2010@gmail.com
   

8 comments:

  1. Great Effort by conservationalists and birders who are trying to protect the lakes and waterbodies for endemic and migrant birds. The professional significance of identifying, reporting, counting, e-birds, research was relevant to scientific growth of the organization. Devika

    ReplyDelete
  2. Excellent article about Tamil birders meet which makes me to recall everything lively. Thanks for your service both for Tamil and Birds. My best wishes

    ReplyDelete
  3. Wonderful report of the birdes meet and I like your style of writing!!
    Next time please include pics of persons mentioned by you.All the best and happy birding!

    ReplyDelete
    Replies
    1. Sure next time i ill do mam, thank you

      Delete
    2. Nice article. I am a bird watcher. I am planning to go to Tamil Nadu. Will you please kindly let me know exactly where did you see all these birds? thanks in advance.

      Delete
    3. Sorry for delayed reply pls send your mail ID

      Delete
  4. உங்களின் ரசனை என்னை ஆட்கொண்டுவிட்டது அண்ணா😁😁.
    ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறேன் 6வது தமிழ் பறவை ஆர்வலர்கள் சந்திப்பை நோக்கி

    ReplyDelete