Sunday 1 November 2015

Bannarghatta Zoological Park



பெங்களுரு, கோபாலன் மால் எதிரில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அங்கிருந்து சரியாக பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பானர்கட்ட உயிரியல் பூங்காவுக்கு செல்வதற்க்கு.இரண்டு விதமாக பார்க்கலாம் உயிரியல் பூங்கா மற்றும் சபாரி செல்லலாம் .சபாரி செல்பவர்கள் சிலர் உயிரியல் பூங்காவுக்கு வருவதில்லை இரண்டில் ஏதாவது ஒன்றை பார்ப்பவர்களே அதிகம்.


நான் ஏறிய பஸ் முழுவதும், ஒரு கிலோமீட்டர் தள்ளியே விட்டு விடுவோம், நடந்து தான் செல்லவேண்டும் என்றே சொல்லி கொண்டிருந்ததால் ஏறி, ஏறி இறங்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் ஏற்கனவே எந்த பஸ் போகும் என்று கேட்டு தெரிந்தே வந்தேன் ஆனால் அந்த பஸ் எல்லாம் தள்ளியே நிற்கும் என்றே நடத்துனர் சொல்வதை கேட்க்க வேண்டியிருந்தது. கடைசியாக உயிரியல் பூங்கா செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்து விட்டேன்.  

பெங்களுருளில் இருக்கும் ஒரே சவுகரியம் நாம் தமிழிலேயே பேசலாம் அவர்களும் நமக்கு புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழில் பேசுவார்கள் சில இடத்தில நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கோமோ என்று உணரும் அளவுக்கு தமிழ் கபடி விளையாடும்.அதே போல் தான் சித்தூரிலும் (ஆந்திரா)

அரைமணி நேரத்தில் உயரியல் பூங்காவை அடைந்தேன்.பஸ் நிறுத்தத்தை ஒட்டியது போல் உயிரியல் பூங்கா தொடங்குகிறது.நான் சபாரி செல்லாமல் சுற்றி பார்க்கலாம் என்று டிக்கெட் கவுன்ட்டர் நோக்கி நடந்தேன்.எனக்கு டிக்கெட் வாங்கிய பிறகு கேமராவுக்கு டிக்கெட் என்று கேட்டேன், என்னை ஒரு முறை ஏற பார்த்த பிறகே டிக்கெட் கொடுத்தார் முதலில்  புரியவில்லை பிறகு தெரிந்தது, யாரும் கேமராவுக்கு டிக்கெட் வாங்குவதில்லை என்று. ஆனால் கேமராவுக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என்ற பலகை அவரை பார்த்து சிரித்து கொண்டிருந்தது. 

இடது புறத்தில் சபாரியும் வலது பக்கம் திரும்பினால் உயரியல் பூங்காவும் செல்லலாம்.வலது புறம் திரும்பி சென்றேன். சென்னை வண்டலூர் உயரியல் பூங்கா போல் பெரியதாக இல்லாமல் கிண்டி பூங்காவை விட பெரியதாக இருந்தது.மூன்று நீர் யானை என்னை வரவேற்றது நீரில் விளையாடி காட்டியது.

     
                          
மிக பெரிய வலை மூடிய குளத்தில் இராகொக்கு ,கூழைகடா,அரிவாள் மூக்கன்,கரண்டிவாயன் என்று நிறைய நீர் வாழ் பறவைகள் பாட்டு பாடி கொண்டு இருந்தது.ஏறக்குறைய எல்லா உயிரியல் பூங்காவிலும் இதை போல் ஒரு குளம் ஆரம்பத்திலேயே காணப்படுகிறது.இவற்றை தொடர்ந்து தன்னந்தனியாக காட்டு பூனை ஒன்று சுற்றி வரும் கூண்டு அருகில் சென்று நின்றேன்.மிக பெரிய கூண்டு அதனால் சவகாசமாக சுற்றி வந்து நம்மை பார்க்கிறது.பூனை உருளுவதற்கு பச்சை பசேல் என்று புல் தரை உள்ளது. 

                            
மிக உயர்ந்த மரத்தில் மட்டும் வாழும் பறவையான இருவாச்சி பறவை ஒன்று  கூண்டில் அல்லல் பட்டது. சிப்ஸ் ஒன்றை ஒருவர் கொடுத்தார் அதை எடுப்பதற்கு தன் நீண்ட முக்கை வெளியே நீட்டி முயற்சி செய்து கொண்டிருந்தது.இங்கு தான் நான் இந்த பறவையை முதல் முறையாக பார்க்கிறேன். மேற்கு தொடர்ச்சி மலையில் இப்பறவை காணப்படும். கேரளாவின் மாநில பறவை மலபார் இருவாச்சி பறவையாகும் அதே போல் அருணாச்சல பிரதேசத்தின் மாநில பறவையாகும்.


இந்தியாவில் ஏழு வகையான இருவாச்சி பறவை உள்ளது இவை போடும் சத்தம் ஹெலிகாப்டர் சத்தம் போல் இருக்கும்.
                                
சிங்கம் இருப்பதற்கான பலகை காணப்படுகிறது ஆனால் பார்க்க முடியவில்லை நிறைய சிறுத்தைகள் உலாவியும் சிலது பாறை மேல் படுத்து யார் பார்த்தால் எனக்கென்ன என்பது போல் அமைதியாக இருக்கிறது.உயிரியல் பூங்காவில் நிறைய பறவைகள், குரங்குகள், மான்கள் பார்த்தாலும் சிங்கம், சிறுத்தை, புலி பார்ப்பது என்பது உண்மையில் சிலிர்ப்பை தரும் விஷயமாகும்.அதன் அருகில் செல்லும்பொழுதே உடம்பு சிலிர்த்து எங்கே நம் அருகில் வந்து விடுமோ என்ற உணர்வையும் தரும். அது மட்டும் இல்லாமல் எங்கே கூண்டை விட்டு வெளியே தப்பி வந்து விடுமோ என்ற பய உணர்வையும் தந்து விடுகிறது.

இரண்டு கரடிகள், தாம் கூண்டில் இருக்கோம் என்று நன்கு உணர்ந்து படுத்தே காட்சியளித்தது.நிறைய நட்சத்திர ஆமைகள் வலம் வந்து உணவை சாப்பிட்டும், மயில்கள் ஆனந்தமாக தோகை விரித்து ஒன்று ஆடியும் மற்றொன்று உயரமான கொம்பில் அமர்ந்தும், ஆந்தைகள் என்னை பார்த்து ஏன் காலையில் வந்து என் தூக்கத்தை கெடுக்கிறாய் என்பது போல் இருந்தது. 

பேனர்கட்டா உயிரியல் பூங்கா அமைதியான சூழலில் அமைந்து இருப்பதால் எந்த வித வெளி சத்தமும் இல்லாமல் நாம் உள்ளே வலம் வரலாம் என்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.

மலைப்பாம்பு, மான்கள், நிறைய வெளிநாட்டு பறவைகள், குரங்குகள்,யானைகள்,காட்டு கோழிகள், வெள்ளை புறா,வெள்ளை மயில், கூகை இவற்றை நம் செய்திதாளில் ஆஸ்த்ரேலியா பறவை என்றே தவறாக குறிப்பிடுவார்கள்.குள்ள நரி இரண்டு என்று பார்ப்பதற்கு நிறைய உள்ளதால் தயங்காமல் சென்று வரலாம் முடிந்தால் சபாரியும் செல்லலாம்.

ஒவ்வொரு கூண்டின் முன்பும் அந்த கூண்டில் இருக்கும் பறவை அல்லது விலங்கு பற்றிய தெளிவான தகவல்கள் கொடுத்துள்ளார்கள்.உதாரணத்துக்கு லவ் பேர்ட்ஸ் என்று நாம் அழைக்கும் சிறிய பறவையை பற்றி 

LENGTH     : 18CM

WEIGHT    : 28-30 GM

LIFE SPAN : 5-10 YEARS

SEXUAL MATURITY : 3-4 MONTHS

INCUBATION PERIOD : 18 DAYS

CLUTCH SIZE : 5-6 EGGS

HABITAT : SCRUBLAND, OPEN WOODLAND AND GRASSLAND

RANGE : AUSTRALIA, EXCEPT EASTERN COSTAL AREAS.

DIET IN WILD : SEEDS OF SPINIFEX, GRASS WEEDS AND SOMETIME RIPENING WHEAT.

                                                  DIET IN ZOO:( PER HEAD)
                                      CORIANDER LEAVES- 15G / MILLET – 15G

என்னை சுற்றி நிறைய மாணவர்கள் தமிழில் பேசி விளையாடி கொண்டிருந்தார்கள் எனக்கு கிண்டி பூங்காவில் இருப்பது போல் இருந்தது. அவர்களை அழைத்து கேட்டதற்கு கோரமங்களாவில் உள்ள பள்ளியில் படிப்பதாகவும் திருவண்ணாமலையில் இருந்து வந்து இங்கேயே செட்டில் ஆனவர்கள் என்று தெரிந்தது. வருடம் ஒருமுறை பள்ளியால் இங்கே அழைத்து வரப்படுகிறார்கள்  ஆனால் இவர்கள் சுற்றி பார்ப்பதை விட விளையாடுவதே சிறந்ததாக கருதுகிறாற்கள். எல்லா மாணவர்களும் வேகமாக சுற்றி வந்து பறவைகளை பார்த்து விட்டு விளையாட ஆரம்பித்துவிடுகிறார்கள் .


               -    செழியன்