Monday 26 October 2015

3000 PARAKEET




இவரைப் பற்றி தின செய்தித்தாளில் தான் படித்தேன், அவர் இடத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்து, சென்றும் வந்தேன். பார்க்க பார்க்க ஒரே பச்சை கலராகவே தெரிந்தால் என்ன உணர்வது கண்ணை மூடினால் எப்படி ஒரே இருட்டாக உணர்வோமோ அப்படி ஒரே பசுமையாக உணர்ந்தேன். ஒரே நேரத்தில் மூன்றாயரதிற்க்கும் மேல் பச்சைகிளிகள் ஒரு விட்டிற்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கடந்த பத்து வருடமாக வந்து செல்வதை அந்த விட்டின் உரிமையாளர் சொல்லும்பொழுது ஆச்சரியம் மட்டுமில்லாமல் சந்தோஷமாகவும் இருந்தது. 
  
வீட்டின் பக்கத்தில் இருக்கும் கிளிகள் தான் வருகிறது என்று நினைத்து இருந்தேன்.  இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தும் வந்து செல்கிறது என்று அவர் சொல்ல எங்கு எங்கு இருந்து வருகிறது என்ற கேள்வியும் நான் கேட்க்க வேண்டியிருந்து.திருவான்மியூர்,பெரம்பூர்,அண்ணாநகர்,தாம்பரம்.....இவற்றால் அங்கு இருக்கும் புறா, காகம் போன்ற பறவைகளுக்கும் உணவு கண்டிப்பாக உண்டு என்பதை பார்க்க முடிந்தது.

ஒரு மாலை பொழுது அங்கு செல்வது என்று முடிவெடுத்து இரண்டு கிலோ அரிசியுடன் சென்றேன்.நான் சென்ற பொழுது அவர் நீண்ட மர பலகைகளை எடுத்து இரண்டு பக்கம் உள்ள சுவற்றின் மேல் நீட்டி வைத்து, ஊறவைத்த அரசியை அரை அடி இடைவெளியில் வைத்து கொண்டிருந்தார்.போகும் பொழுது ஏதாவது வாங்கி சென்றால் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்று சொன்னவரையும் கூடவே அழைத்து சென்றேன். 

அரிசி வைத்து கொண்டிருக்கும் பொழுதே பச்சைக்கிளிகள் இப்படியும், அப்படியும் பறந்து செல்வதை பார்த்து கொண்டே அவரிடம் பேச்சு கொடுத்தேன்.சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்து வந்தவரிடம் ஆச்சரியம் விலகாமல் எப்படி இதை தொடர்ச்சியாக செய்து வருகிறிர்கள் என்ற கேள்விக்கு பத்து வருடமாக நாள் தவறாமல் காலை, மாலை இவர்களுக்கு உணவை வைத்து விடுவேன் இதுவரை ஒரு நாள் கூட தவறியதில்லை, இதனால் எந்த நிகழ்சிகளுக்கும் செல்லவும் முடிவதில்லை என்று சொன்னவர் அனைத்தும் சொல்லி முடித்தார்.

கிளிகளை அவர், இவர் என்றே மரியாதையாக சொல்கிறார் நான்தான் ஆரம்பத்தில் முழித்து பிறகு கிளிகளை தான் இவர் இப்படி சொல்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.அவர் பேச்சில் நிதானம் உண்டு.பல மாநில  தொலைக்காட்சியில் இருந்து வந்து கிளிகள் சாப்பிடுவது பறப்பது,என்று முழுவதும் வீடியோவாக எடுத்து  தொலைக்காட்சி செய்திகளில் வெளியிடுகிறார்கள்.பல கல்லுரி  ஆராய்ச்சி மாணவர்கள் கூட ஆவண படமாக எடுத்து யூ டியூப்பில் பதிவேற்றி இருக்கிறார்கள்.

உணவை வைத்து விட்டு பிறகு, நாம் கீழே போய்விடுவோம் என்றார் அப்பொழுதுதான் கிளிகள் வரும் இவ்வளவு வருடம் ஆனாலும் நான் இருந்தாலும் கிளிகள் சுதந்தரமாக  வராது என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கிகொண்டிருந்தார். நாங்களும் அவருடன் கீழே வந்தடைந்தோம்.மழை காலத்தில் மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.இவர் இருந்தாலும் கிளிகள் வரும் அது எப்படி என்று அடுத்து சொல்கிறேன்.கீழே வந்த பிறகு கிழே இருந்து மேலே பார்ப்பதும் அவருடன் பேசுவதும் என்று நிமிடங்கள் சென்று கொண்டிருந்தது.

சில மணிநேரத்தில் நூற்றுகணக்கில் பச்சைகிளிகள் வந்து அமர்ந்திருந்தது. ஒரே இடத்தில் இவ்வளவு பச்சைகிளிகளை பார்க்கும்பொழுது ஆச்சரியத்தை தந்தது.அந்த பக்கம் போவோரும் மேலே பார்த்தே செல்கிறார்கள். இவர் கீழே வந்து நிற்பதற்கும்  காரணம் இல்லாமல் இல்லை. இரண்டு நாட்கள் முன்பு ஒரு பையனும் இரண்டு பெண்களும் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது நம்ம பையன் சீன் போடுவதற்கு இப்போ பாருங்கள் என்று அருகில் இருக்கும் கல்லை எடுத்து கிளிகளை நோக்கி எரிய தொடங்கினான். உடனே இவர் சென்று அதை தடுக்க வேண்டி இருந்தது. தினமும் இப்படி பட்ட தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்று சொன்னவர் இங்க யாரும் இதற்க்கு எந்த உதவிகளையும் செய்வதில்லை நானும் யாரிடமும் கேட்பதும் இல்லை ஆனால் ஒரே பிரச்னை வீட்டு ஓனர் தான் வீட்டை காலி பண்ண சொல்கிறார் என்று சாதாரணமாக சொல்கிறார். 

ஆறு மணியளவில் கிளிகள் செல்ல தொடங்கி ஆறு பதினைந்துக்கு ஏறக்குறைய அனைத்தும் சென்று விட்டது.மழை காலத்தில் நிலைமையே வேறு காலையில் வரும் கிளிகள் மாலை வரை இங்கேயே தங்கி நாள் முழுவதும் சாப்பிட்டு  கொண்டேயிருக்கும். அப்பொழுது, நான் இருந்தாலும் கிளிகள் என் அருகிலேயே வந்து அமரும் என்றவர் மழைக்காலத்தில் நாள் ஒன்றுக்கு அறுபது கிலோ அரிசியும் இப்பொழுது முப்பது கிலோ அரிசி மட்டும் போதும் என்றார்.

பச்சைக்கிளிகளில் அலெக்ஸ்சாண்டர் வகை ஒன்று உண்டு என்று தெரியும் அதனால் அவற்றை காண்பிக்க சொன்னேன். மேலே பார்த்தவர் சிறிது நேரத்தில் அங்கே பாருங்கள் என்று சத்தமாக சொன்னார்  நீண்ட வாலும் மற்றதை விட பெரியதாக இருந்தது அலெக்ஸ்சாண்டர் பச்சைக்கிளி. பொதுவாக ஆண் பச்சைக்கிளிகள் கழுத்தில் சிகப்பு கலர் வலையம் போல் இருக்கும். பெண் கிளிக்கு அது கிடையாது. 

இதுவரை இரண்டு, மூன்று முறைதான் நான் ஊரில் இல்லாமல் இருந்தேன் அப்பொழுது என் மனைவி பார்த்துகொண்டார். காலையில் நான்கு மணிக்கு எழுந்து ஐந்து முப்பதுக்குள் உணவை வைத்து விடவேண்டும் சரியாக ஆறு மணிக்கு எல்லா கிளிகளும் வந்து விடும் அதே போல் தான் மாலையும். சாரா சரியாக ஒரு நாளைக்கு மூவாயிரம் பச்சைகிளிகள் வருவதாக குறிப்பிட்டவர்.அமெரிக்கன் கான் தான் இவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு அதை என்றாவது ஒரு முறைதான் தருவேன் விலை அதிகம்  என்பதால் அவ்வவ்போது வாங்க முடியவில்லை என்றார்.

YOU TUBE LINK - https://www.youtube.com/watch?v=J_GyoQ3mahE

வீட்டின் முன்பு இரண்டு பச்சைக்கிளி படத்துடன் ப்ளெக்ஸ் பேனர் வைத்து இருக்கிறார்.அதில் ஒரு கிளி மிக குட்டியாக தன் தாயுடன் வந்து உணவு சாப்பிடுவதை படம் உள்ளது.தினமும் நண்பர்களுக்கு பச்சைக்கிளி படத்துடன் தான் வாட்ஸ் அப் செய்தி அனுப்புகிறார். நீங்கள் ஒரு முறை சென்று வாருங்கள் காலை வேலையில் பச்சைக்கிளி படத்துடன், உங்கள் மொபைல் வாட்ஸ் அப் உங்களை எழுப்பும்.



 - CHEZHEYAN


No comments:

Post a Comment